பனியீரம் சொட்டும் காதல் குறிப்புகள்
எழுத்து – ஒவியம் :
நட்சத்திரா
என் முதல் காதல் பற்றி கேட்கிறார்கள்
என் பால்ய பருவத்தில்
ஒரு நடிகையின் முக அசப்பில்
சைக்கிளில் என் வீட்டை
அடிக்கடி கடந்து போன
ஒரு மூத்த சகோதரியை
முதல் முறையாய் காதலித்தேன்
இப்பவும் கூட
தேவையான நேரங்களில்
அவளை காதலிக்கிறேன்
(1)
துவைக்கும் கல்லில் அமர்ந்து
அறிவியல் வீட்டுப்பாடம் எழுதினோம்
எனக்கும் சேர்த்து
தவளை படம்
வரைந்து கொடுக்கும்
உன் கரிசனை
அந்த அந்தி மாலையில்
உன் மேல் காதலை
வரைந்துக் கொண்டிருக்கிறது
(2)
டியூசனுக்கு எனக்கும் சேர்த்து
பேனா கொண்டு வரும்
உன் சிநேகம்
டியூசன் மிஸ்ஸின்
பிரம்பு அடியையும் மீறி
புத்தகத்தை மறைத்து வைத்து
காதில் கிசுகிசுப்போம்
தினம் இரவு டியூசன் விடுகையில்
உன் வீட்டு சந்து திகிலூட்டுவதாய்
வீடு வரை கொண்டு போய் விட
சொல்லி கைபிடிப்பாய்
உன் வீடு வரை
உன் இடை விடாத பேச்சு
என்னை இதமூட்ட
அன்று விசித்திரமாய்
நீ டியூசன் வராத பொழுதுகள்
உன் எதிர் வீட்டு தோழியிடம்
காரணம் கேட்டு திகைப்படைந்தேன்
சில நாட்களிலே
நீ திரும்பிய பொழுதொன்றில்
வெட்கத்தோடு
உன் சீர் ஆல்பம் காண்பித்தாய்
அன்றிலிருந்து டியூசன் விடுகையில்
உன்னை கூட்டி போக
உன் அம்மாவோ அல்லது
அப்பாவோ வர பழகிக்கொண்டார்கள்
(3)
வாசனை திரவியம் கலந்த
அயல் நாட்டிலிருந்து
இறக்குமதியான பவுடர் வாசம்
உன் கன்னத்தில்
கோகுல் சேண்டல்
பவுடர் வாசம்
என் கன்னத்தில்
அதிலும் பவுடர் பூசுவதற்கென
விசேஷ பஞ்சு துணி
உன்னிடம்
வெறும் கைகள் மட்டும்
என்னிடம்
இருந்தாலும்
உன் முகம் பவுடர் வாசத்திற்கு
நான் ஏங்க
என் முகம் பவுடர் வாசத்திற்கு
நீ ஏங்க என
நாம் பால்ய காதல்
(4)
வெள்ளை காகிதத்தை
நனைக்கும் வண்ண பென்சில்கள்
உன்னிடமே...
என்னிடம் இல்லை .
உன் வண்ண பென்சில்கள் மேல்
ஏற்பட்ட பிரியம்
மெல்ல மெல்ல
உன் மேலும்
தொற்றி கொண்டது
(5)
அறிவியல் கண்காட்சி யென
தர்மகோலில் செயற்கை
அணை செய்து கொண்டு வந்தவள்
எல்லா மாணவர்களோடு
சேர்ந்து வந்து
பார்த்தால் போதும் என்று
கட்டளை போட்டு போனாள்
பார்வையாளனாக நான்
எல்லா பார்வைகளும்
அவள் செயற்கை அணை மேல்
இயலாமையில் நெட்டி தள்ளுகிறது
காதல்
(6)
உன் காதலியின் மேல்
அவள் தோழியிடமிருந்து
இரண்டு குற்றச்சாட்டுக்கள்
பள்ளி முடிந்தது
அவள் உடனே கிளம்புவதில்லை
முகம் கழுவி அழகு படுத்தி
கொண்டுதான் கிளம்பவளாம்
வகுப்பு தலைமை
அதிகாரம் வாங்கியதிலிருந்து
யாரை கண்டாலும்
எறிந்து விழுகிறலாம்
இந்த இரண்டு குற்றம்
உன்னாலே நிகழ்ந்திருக்கும்
அதுவும் நீ
அவளை பின் தொடர்ந்து
சென்ற நாளிலிருந்து.
(7)
நீ கல்லூரி விடுதியிலிருந்து
வீடு திரும்பும் நாட்கள்
எனக்கும் விசேஷ நாட்கள்
நலம் விசாரிப்பதில் ஆரம்பிக்கும்
நம் தொலைப்பேசி சம்பாஷனைகள்
நீ உடைகளை
இஸ்திரி போட்டு பைகளில்
எடுத்து வைப்பது வரை தொடர
நீ திரும்பி விடுதி கிளம்ப
விழா முடிந்து
நாற்காலிகளை ஏற்றி விட்டு
கிளம்பும் வாகனமென
கமழும் என் சோகம்
(8)
எந்த ஒரு வியப்பும்
பிரியத்தை ஏற்படுத்துகிறது
உன் வீட்டு மரங்களின்
பழங்களை பறிக்க
என்னையே அழைக்கிறாய்
மரத்தின் மேல்
ஏறும் என் மேல்
நீ வியப்பு கொல்வதில்லை
நான் பறித்து போடும்
பழங்களின் மேல்
வியப்பு கொல்கிறாய்
என் மேல் வியப்பு காட்டாத
உன் வியப்பே
உன் மேல் பிரியத்தை
அதிகரிக்கிறது
(9)
நீ வெள்ளை தேக
பணக்கார பெண்
உன் அதிகாரங்கள் ஏவ
நான் உனக்கு எற்றவன்
துன்பம் என்பதை
அறியாதவள்
என் காதல்
உன்னிடம் உரசி
நான் மட்டும் தேய
(10)
விடுமுறையென வருவபவள்
என் தங்கையின்
உடை அணிந்து
அழகு களைத்து
கொண்டை போட்டு
ரிமோட்டோடு டி.வி.
பார்க்க அமர்பவளே
என் அத்தை மகள்
ரிமோட் இல்லமால்
என்னையும் இயக்க
(11)
சகோதரியாகும் நீ
உன்னிடம் பேச
என்ன இருக்கிறது
ஒரே நேரத்தில்
தாய்மையும் சிநேகமும்
உன்னிடம் கிடைப்பதாய்
லயிக்கும் மனம்
(12)
திடமானதில் முட்டி உடையும்
நீர்துளி யென
மூத்த சகோதரி உன்னிடம்
சம்பாஷணைகள் பேசி
உடைகிறது மனம்
(13)
நீ குடிப்பெயரும்போது
வாங்கமால் விட்டுச்சென்ற
இசை தட்டை
நான் இப்பொழுதெல்லாம்
கேட்பதில்லை
ஏனென்றால்
மெல்ல இசையோட்டத்தால்
உன் நினைவுகளால்
நான் அழுதே விடுகிறேன்
(14)
உன்னை குறுக்க குறுக்க வைக்கும்
எதிர் வீட்டு ஜன்னல் பார்வை
நீ தாழ்வாரத்தில்
அமர்ந்து தலை சீவும் போதும்
துணி துவைக்கும் போதும்
வாசல் கூட்டும் போதும்
உன் மேல்
நிலைக்குத்தியிருக்கும் பார்வை
உனக்கு யாரென்று
பார்த்து விடும்
ஆவல் இருந்தாலும்
தயவு செய்து
உன் கண்களை
திருப்பி விடு
(15)
உடை கசங்கி
வறண்ட தூரிகையாய்
அவள் முடி யென
துவைக்கும் கல்லில்
அமர்ந்து பல் விளக்குவாள்
இரண்டு செம்பில் முகம் கழுவி
எதிரே நிற்கும் என்னை தயங்கி
பார்த்து விட்டு விறுக்கென்று
வீட்டுக்குள் செல்பவள்
எதிர் வீட்டு பெண்
சாவகாசமாக என் காதல்
தூண்டிவிடுவதே அவள் வேலை
(16)
நான் படிக்கும்
கல்லூரி அமைப்பில்
அவள் அக்கா
ஒரு ஆங்கில பேராரசரியை
மற்றபடி அவள் முகத்தின்
பிரதி அவள் அக்காவிடம்
இருப்பதால் அவளையும்
காதலிக்கிறேன்
(17)
உன்னை மறுத்து விட்டு
அவள் தினமும் வரும்
பேருந்தின் நடத்துனரிடம்
சிநேகம் பேசும்
உன் தோழி வேசி என்று
வசை பாடினேன்
அதற்காக என்னை மன்னிக்கவும்
அவள் மேல் உன் கனவுகளை
படர விட்டிருப்பது
பற்றி எனக்கு தெரியாது
(18)
உன் காதலனோடு
பகல் பொழுதை
உன் அறையில்
கழிக்கும் நீ
என் வரவை
எதிர்பார்த்திருக்க மாட்டாய்
உன் காதலனிடம்
நம் நட்பை
அறிமுகப்படுத்தும் தன்மை
உனக்கு மட்டுமே
அந்த நேரத்தில் மட்டும்
சாட்சிக்காரனை தழுவும் காதல்
(19)
பஞ்சு தொழிற்சாலை அமைப்பில்
நீ எனக்கு
பக்கத்து தொழிலாளி
அதையும் மீறி
நீ எனக்கு நல்ல சிநேகிதி
இயந்திரத்தில் விரல் நசுங்கி
மருத்துவமனையில் கிடந்தேன்
பாலிதீன் பைகளில்
காதலோடு வந்தாய்
பரஸ்பரம் காதல்
பரிமாறிக் கொண்டோம்
விடுமுறை நாள்களில்
கோயில்களில் சந்தித்தோம்
நம் காதல் அறிந்து
சொத்தத்தில்
உன்னை மனம் முடிபதாய்
வீட்டில் பேச்சு என
நெஞ்சில் சாய்ந்து
அழுது தீர்த்தாய்
உன் கனவை
நான் நிறைவேற்ற
என் கனவை
நீ நிறைவேற்ற
வாரி சுருட்டிக் கொண்டு
கிளம்பினோம்
நமக்கான தேசத்திற்கு
(20)
ஆஃபிஸ் வேலையை விட்டு விட்டு
அவள் என்னோடு
போனில் பேசி கொண்டிருந்தாள்
நண்பர்கள் கிண்டல் செய்வதாக
போனை வைக்கட்டுமா என்று
அனுமதி கேட்ட படி
அந்த தருணத்தின்
எனக்கான குளிர்வை
அவளே பற்றவைக்கிறாள்
சில நேரங்களுக்கு
(21)
குடுவைக்குள் அகப்பட்ட
வண்ண மீன்
நீ
உன் பெரும்பாலான பொழுதுகள்
அலுவலக மேசையில் கழிய
மீதி பொழுதுகள்
சமையலறையில் கழிவது என
நீயும் குடுவைக்குள்
அகப்பட்ட வண்ண மீன்
என்பதை ஒப்புகொள்கிறாய்
துடுப்புகள் விசிறி நீந்த
நம் காதல் உனக்கு கடல்
(22)
நரைமுடி மீசையை நீவிவிட்டு
தூரிகையோடு நிற்பவனை
தேடி வரும் ஒரு இளையவள்
தன் முலைகளில்
காதல் வரைய கேட்கிறாள்
(23)
பெண் என்றால்
அபிலாசைகளை கட்டுப்படுத்த வேண்டுமா
என்ற எதிர் மன கேள்விகளுடன்
தன் சகோதரனின்
நண்பனின் சுபாவத்தால்
ஈர்க்கபட்டவாள் ஒருத்தி
அவனை அலைப்பேசி சொற்களில்
விழ செய்கிறாள்
அவர்களுடைய
மனம் பற்றிய வார்த்தை பரிவர்த்தனைகள்
உடல் பற்றிய வார்த்தை பரிவர்த்தனைகளாக
நாளடைவில் மாற
சில நேரங்களில்
ஆண் என்பவன்
பெண்ணை தீண்டும்
விஷ ஸர்ப்பம் மென
ஆவது இயல்பு தானே
இவனை மட்டுமா
குறை சொல்ல முடியுமா
அவள் உடல் தீண்டும் ஆசையை
அவன் முறையிட சில வாக்குவதங்கள்
நிகழ்ந்து விட
அவன் சுபாவங்களை விட
என் உடல் தர அது ஈடாற்றது
என்று அவள் தெளிவு கொள்ள
நீர் கவ்விய
நெருப்பு யென துணிந்தாள்
உடலிழக்க இந்த பேதை
(24)
வயிற்று வலி மிகுந்து
ஒரு கர்ப்பிணி
நான் பணிபுரியும்
அலுவலகத்திற்கு
தொலைப்பேசி அழைப்பதாக
கனவு கண்டேன்
ஏன் எதிர் காலத்தில்
என் மனைவியாக
கூட இருக்கலாம்
அன்பின் பரிவர்த்தனைக்கு
ஏங்கி வாழ சொல்கிறது
(25)
தனிமை பூட்டி கிடக்கும்
வீட்டை திறக்கும் நீ
அறை விளக்கு வெளிச்சம்
உன் மேல் படர
உன் நகைகளையும்
புடவையும் கழட்டி எறிந்து
வீட்டுக்கென புடவை
அணிந்து விட்டு
களைப்பு போர்த்தி
கிடக்கும் நீ
நான் வந்தவுடன்
எங்கியிருந்தோ வந்த
ஒட்டி கொள்கிறது
உன் குதூகலம்
(26)
இது நடக்கும் போது
நகரத்தின் ஒரு பல அடுக்கு மாடி கட்டிடத்தின் கீழ்
நின்றுக் கொண்டிருந்தோம்
மழை பெய்ய வேண்டி
மேகங்கள் அடர் கறுப்பில்
சூழ்ந்து நின்றது
இனிமேல் அவளுக்கும் எனக்கும்
பேச்சு கிடையதாம்
எனக்கென அவள்
அனுப்பிய கடிதங்களையும்
விரும்பி எடுத்துக் கொண்ட
புகைப்படங்களையும்
அடம் பிடித்த கேட்டுக் கொண்டிருந்தாள்
நானோ காதல் தொடர
மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தேன்
அவள் எங்கோ பார்த்து கொண்டு
நின்றுக்கொண்டிருந்தாள்
தூறல் விழுந்து வழுக்கும்
நெடுஞ்சாலையில்
என் பேச்சுகளை விட்டபடி
(27)
உன் பிரிவால் காதல் நோய்வாய்பட்டு
படுத்த படுக்கையாய் கிடக்கிறேன்
என் நலம் விரும்பி
நண்பர்களின் ஆலோசனை படி
ஒரு பெண் மருத்துவரை
பார்க்க சென்றேன்
அவள் முகமோ அசப்பில்
உன் முகம் போலவே இருக்கிறது
அவள் பஞ்சு தேய்த்து
என்னுள் மருந்து ஏற்றியது
உன் முகமே
அவள் அணுகு முறை
என் நோய் தீர்ப்பதாக
தெரியவில்லை
உன் மேலுள்ள காதல்
நோய் முற்றி
என் மரணம் நிகழும்
ஒரிரு நாட்களில்.
தொடர்பு கொள்ள :
http://www.facebook.com/writernachathira
படைப்புகளை
படிக்க :
http://www.facebook.com/nachanthira.
* Thanks For Reading *